கும்பகோணம் அடுத்துள்ள திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவில் அர்ச்சகர் பணி நியமனத்தில் குளறுபடி நடைபெற்றுள்ளதாக ஆலய பாதுகாப்பு பிரிவினர் புகார் தெரிவித்துள்ளனர்.
கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாதசுவாமி கோவிலில் நவக்கிரகங்களில் ஒன்றான ராகுவிற்கு தனி சன்னதி உள்ளது.
பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் நாக தோஷம் உள்ளவர்களுக்கு ராகு கால நேரத்தில் சிறப்பு அபிஷேகம் செய்து தோஷ நிவர்த்தி செய்வது வழக்கம்.
தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை தந்து ராகு பகவானை தரிசித்து தோஷ நிவர்த்தி செய்து கொண்டு செல்கின்றனர்.
இந்த நிலையில், இந்த கோவிலில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு பணி நியமனம் செய்யப்பட்டது. இதில் பல குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாக அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் ராம நிரஞ்சன் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை இணை ஆணையரிடம் மனு கொடுத்துள்ளார்.
இது குறித்து ராம நிரஞ்சனிடம் பேசியபோது, “திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் உதவி அர்ச்சகர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு 3-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற்றது.
ஆனால், நேர்முகத் தேர்விற்கு முன்னதாகவே உதவி அர்ச்சகர் பணிக்கு சிலரை நியமனம் செய்ய அதிகாரிகள் முன்முடிவு செய்து தெரிவித்ததாக ஒரு தகவல் பரவியது.
நேர்முகத் தேர்வுக்கு முன்பாகவே தேர்வு செய்யப்படுபவர்களின் பெயர்கள் வெளியில் கூறப்படுவது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தவறுக்கு காரணமான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
குறிப்பாக, அர்ச்சகர் பணி நியமனம் தொடர்பாக உயர் நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில், இப்படியொரு முறைகேடு நடந்திருப்பது ஏற்கக்கூடிய விஷயம் அல்ல.
இதை ஒரு பொருட்டாக கருதாமல் நேர்காணலுக்கு முன்பே தங்களுக்கு வேண்டியவர்களை பணி நியமனம் செய்துள்ளதாக பேசப்படுகிறது. இது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்.
எனவே, உரிய விசாரணை நடத்தி, தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து இணை - ஆணையரிடம் மனு கொடுத்துள்ளோம்.” என்றார்.
இது புகார் குறித்து மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகன சுந்தரத்திடம் விளக்கம் கேட்டபோது, “ஆலய பாதுகாப்பு பிரிவினர் கொடுத்த மனு தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். விசாரணைக்கு பின்னர் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்படும்.” என்றார் உறுதியான குரலில்.
- விவேக் ஆனந்தன்