கிருஷ்ணகிரி அருகே விடியவிடிய மண் திருட்டில் ஈடுபட்ட லாரிகளை பொது மக்கள் சிறை பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் அருகே உள்ள வேப்பாலம்பட்டி கிராமம் கெட்டு என்னும் பகுதியில் பட்டியல் இன மக்களுக்கு சொந்தமான இடம் உள்ளது.
இப்பகுதி மலைப்பகுதியாக உள்ள நிலையில், இங்கு பலன் தரக்கூடிய மரங்கள் மற்றும் இப்பகுதி மக்கள் வழிபாடு செய்யும் கற்கோவில் ஒன்றும் உள்ளது.
இந்த நிலையில், கடந்த 8-ம் தேதி முதல் இரவு - பகலாக ராட்ச டிப்பர் லாரிகளில் மண் கொள்ளை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இப்பகுதியில் மண் திருட்டில் ஈடுபட்ட வாகனங்களை சிறைபிடித்த பொது மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.
ஆனால், அதிகாரிகள் வராததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வண்டிகளை சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், 'இந்த நிலம் எங்கள் இனத்திற்கு சொந்தமானது. இதில் இரவு -பகல் பாராமல் சுமார் 3,500 யூனிட் மண் கொள்ளை அடிக்கப்பட்டு வந்தது.
இந்த வாகனங்களை பறிமுதல் செய்து மண் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்ளை அடிக்கப்பட்ட மண்களின் அளவுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மேலும், மண் கொள்ளையில் ஈடுபட்ட வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டுமெனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு அவர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய பொழுது 'இது குறித்து தகவல் எனக்கு தெரியவில்லை. இது குறித்து விரைந்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
- பொய்கை. கோ.கிருஷ்ணா