கோவில்பட்டியில் மயானப் பாதை அடைப்பு காரணமாக கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கூசாலிபட்டி கிராம மக்கள் அங்குள்ள சுடுகாட்டை நீண்ட காலமாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனிடையே, அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் சுடுகாட்டிற்கு செல்லக்கூடிய பாதையை வேலி போட்டு அடைத்துவிட்டார்.
இந்த நிலையில், இன்று பாப்பாத்தி என்கிற மூதாட்டி மரணம் அடைந்தார். மயானப் பாதை அடைக்கப்பட்டதால் அவரது உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் கோவில்பட்டி கடலையூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, ஸ்பாட்டிற்கு வந்த கோவில்பட்டி வட்டாட்சியர் மல்லிகா மற்றும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவல் உதவி-ஆய்வாளர் தர்மராஜ் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில், மயானப் பாதையை அடைத்த நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொது மக்கள் கலைந்து சென்றனர்.
- எஸ்.அண்ணாதுரை