சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் தைக்கால் கிராமம் ஜின்னா தெருவைச் சேர்ந்த அஜ்மீர் அலி என்பவரின் மகன் அஹமது அப்ரார் (11). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
தைக்கால் பகுதியைச் சேர்ந்த 5 நண்பர்களுடன், சரஸ்வதிவிளாகம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்கொண்டிருந்தார்.
அப்போது, ஆழமான பகுதிக்கு சென்று குளித்தபோது எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் மூழ்கினார். அவர்களுடன் குளித்துக் கொண்டிருந்த மற்ற 5 சிறுவர்களும் கரையேறி வீட்டிற்கு வந்து விட்டனர். ஆனால், அஹமது அப்ரார் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் சீர்காழி தீயணைப்புத் துறையினர் மற்றும் தைக்கால், சரஸ்வதி விலாகம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி அஹமது அப்ராரை தேடும் படலத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, சிறுவன் அகமது அப்ரார் உடல் குளித்த இடத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் கரை ஒதுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.