கொடநாடு கொலை, கொள்ளை: மேலும் 2 வழக்குகள் பதிவு - என்ன காரணம்?

கொடநாடு தோட்ட கணினி பொறியாளர் தினேஷ் தற்கொலை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது
கொடநாடு
கொடநாடு

கொடநாடு வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீசார் மேலும் 2 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமானது கொடநாடு தேயிலை தோட்டம். இங்கு கடந்த 2017ம் ஆண்டு காவலாளி ஓம்பகதூர் என்பவர் மர்மான முறையில் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக கேரளாவை சேர்ந்த சாயன், வாளையார் மனோஜ், சந்தோஷ் சாமி, திபு, சதீஷன், உதயகுமார் உட்பட 10 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கு சம்பந்தமாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது சேலத்தை சேர்ந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் இந்த கொலை கொள்ளை சம்பவத்திற்கு மூலக் காரணமாக இருந்தது தெரிய வந்தது.

இந்த நிலையில் சேலத்தில் வாகனம் மோதியதில் கனகராஜ் உயிரிழந்தார். அவரது மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.

சி.பி.சி.ஐ.டி போலீசார் கொடநாடு கொலை கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கனகராஜ், வாகன விபத்தில் மரணம் அடைந்தது குறித்து வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இதேபோல், கொடநாடு தோட்டத்தில் கணினி பொறியாளராக பணியாற்றி வந்த தினேஷ் என்பவரது தற்கொலையும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்கொலை செய்து கொண்ட தினேஷின் பெற்றோர்கள், சகோதரி உட்பட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்குடன் கூடுதலாக இந்த இரு வழக்குகளையும் தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக சேலம், சென்னை, கோவை, நீலகிரி போன்ற பகுதிகளில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த 2 கொலை வழக்கு தொடர்பாக, சம்பந்தப்பட்டவர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com