கேரளாவில் 70 வயது முதியவரின் சட்டை பையில் இருந்து மொபைல் போன் வெடித்து சிதறி தீப்பிடித்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் மாரோட்டிசால் என்னும் பகுதியில் வசிப்பவர் 70 வயது மதிக்கதக்க முதியவர் எலியாஸ். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அவரது சட்டைபையில் எதிர்பாராதவிதமாக செல்போன் திடீரென அதிக சத்தத்தில் வெடித்து, தீப்பற்றி எரிந்தது.
உடனே பற்றி எரிந்த தீயை சமர்த்தியமாக அவர் அணைத்துவிட்டார். இதனால், மயிரிழையில் அவர் உயிர் தப்பினார். ஆனாலும், சட்டையின் பெரும்பாலான பகுதிகள் தீப்பற்றி எரிந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், விரைந்து வந்து அந்த கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராக் காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, அந்த முதியவரின் மொபைல் போன் வெடித்து சிதறியதும் அந்த முதியவர் ஒரு வருடத்திற்கு முன்பு மொபைல் கடையில் இருந்து ஒரு சிறியரக போன் ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியதும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாக பரவி வருகிறது.