தமிழகத்தில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு சென்ற அரசு சொகுசு பேருந்தில் 22 லட்சம் ரூபாய் பணத்தை கடத்திச் சென்ற நபரை கேரள மதுவிலக்கு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு குமரி மாவட்டம் வழியாக அரசு பேருந்தில் கடத்தல் பணம் கொண்டு செல்வதாக கேரள போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, மதுவிலக்கு ஆய்வாளர் வினோஜ் தலைமையிலான போலீசார் குமரி-கேரள எல்லையோர பகுதியான கொற்றாமம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்து கேரளாவிற்குள் அனுமதித்து வந்தனர்.
அப்போது, அரசு சொகுசு பேருந்து ஒன்று வந்தது, அதனை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அந்த பேருந்தினுள் வாலிபர் ஒருவர் சந்தேகப்படும்படி உட்கார்ந்திருந்துள்ளார். அவர் கையில் சந்தேகத்திற்கிடமான முறையில் பை ஒன்றும் இருந்துள்ளது. அந்த நபரை கீழே இறக்கிய போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் கட்டு கட்டாக 22 லட்சம் ருபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து, பணப்பையுடன் வாலிபரை போலீசார் கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்று நடத்திய விசாரணை நடத்தினர்.
இதில், அந்த வாலிபர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜ பிரவீண்குமார் என்று தெரியவந்தது. பணத்தை சென்னையில் இருந்து திருவனந்தபுரம் கொண்டு செல்லும் போது சோதனையில் சிக்கியுள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.