டி.என்.பி.சி தேர்வு எழுத அனுமதிக்காததால் காஞ்சிபுரத்தில் தேர்வர்கள் தேர்வு மைய கதவினை உடைத்து உள்ளே புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு அரசு தேர்வு தேர்வு பணியாளர் மையம் மூலம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உள்ள சாலை ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்றது.
இந்த தேர்வு காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரியில் காலை மற்றும் மாலை வேலைகளில் இருவேளைகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்வர்களுக்கு அதற்கு உண்டான நுழைவுச்சீட்டு அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், காலையில் தேர்வு முடிந்து பின்னர் மதியம் 2 மணிக்கு துவங்க வேண்டிய தேர்வுக்கு வரும் தேர்வர்கள் 30 நிமிடம் முன்னதாக தேர்வு மையத்தின் உள்நுழைய வேண்டும் என விதிகள் உள்ள நிலையில் மதியம் 1.30 மணி அளவில் தேர்வு மைய கதவுகள் மூடப்பட்டது.
இதனால், 50-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் உள்ளேவிடக் கோரி காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்புக்கும் இடைடே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் தேர்வர்கள் திடீரென நுழைவாயில் கதவை உடைத்து உள்ளே புகுந்து தங்களது தேர்வு அறைக்கு சென்று தேர்வு எழுதினர்.
குறைவான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இருந்ததால் தேர்வர்களை தடுக்க முடியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.