விசாகப்பட்டினம் விரைவு ரயிலில் முன்பதிவு பெற்ற ரயில் பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்த பெண் பயணி ஒருவருக்கு, சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், மது போதையில் இருந்த சுரேஷ் என்ற சி.ஆர்.பி.எப் வீரரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த 38 வயது ரோஜா (புனைப்பெயர்) என்பவர் விசாகப்பட்டினம் செல்லும் விசாகப்பட்டினம் விரைவு ரயிலில் முன்பதிவு பெற்ற ரயில் பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
ரயில் ஜோலார்பேட்டைக்கும் காட்பாடிக்கும் இடையில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த சி. ஆர்.பி.எப். வீரர் சுரேஷ் (38) என்பவர் அந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
உடனே, இதுகுறித்து அந்த பெண் ரயிலிருந்த டிக்கெட் பரிசோதகரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் காட்பாடி ரயில்வே காவல்துறையினரிடம் சுரேஷை ஒப்படைத்தனர்.
சம்பவம் நடந்தது ஜோலார்பேட்டைக்கு உட்பட்ட ரயில்வே எல்லை என்பதால், காட்பாடி ரயில்வே காவல்துறையினர் சுரேஷை ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில், சி. ஆர்.பி.எப் வீரர் சுரேஷ் (38) திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அவர் பணி நேரத்தில் மது போதையில் இருந்ததும், இதனால், மது போதை தலைக்கு ஏறி ரயில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதனையடுத்து, சுரேஷ் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-சுரேகா எழில்