திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே கடன் தொல்லை காரணமாக முதல் நிலைக்காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பாச்சல் ஊராட்சி பசுமை நகர் பகுதியில் வசிப்பவர் இன்பராஜ் (32). இவர், திருப்பத்தூர் நகரக் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராகப் பணி புரிந்து வருகிறார். இவருக்கு கலை என்கிற மனைவியும், விஷ்வா (8) பவீன் (6 ) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், இன்பராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பசுமை நகர் பகுதியில் தான் கட்டிய வீட்டின் மீது பாரத ஸ்டேட் வங்கியில் 24 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார்.
ஏற்கனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எச்.டி.எப்.சி. வங்கியில் 18 லட்சம் ரூபாய் கடன் வாங்கிய இன்பராஜ் பாரத ஸ்டேட் வங்கி உதவியுடன் அந்த கடனை அடைத்து விட்டு கூடுதலாக 6 லட்சம் ரூபாய் பணத்தைப் பாரத ஸ்டேட் வங்கியில் கடன் வாங்கியுள்ளார்.
இதனால் கடன் தொகை 24 லட்சமாக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் கடன் தொகை அதிகமாகி வருவதைக் கண்டு இன்பராஜ், மன உளைச்சலுக்கு ஆளாகி, வீட்டில் உள்ளவர்களிடம் செத்துப் போகிறேன் என்று அடிக்கடி புலம்பி உள்ளார்.
இந்த நிலையில், திருப்பத்தூர் நகரக் காவல் நிலையத்தில் பணி முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த இன்பராஜ், வீட்டில் குழந்தைக்குக் கட்டி வைக்கப்பட்டிருந்த தொட்டில் கயிறு மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த ஜோலார்பேட்டை காவல்துறை பிரேதத்தைக் கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.