நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஏ.எஸ்.பி பல்வீர் சிங் மீது வழக்கு பதிவு செய்யபப்பட்டுள்ள நிலையில், அவரை ஏன் கைது செய்யவில்லை? என பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஏ.எஸ்.பி பல்வீர் சிங் உள்ளிட்டோர் மீது சி.பி.சி.ஐ.டி போலீசார் 3 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில், விக்கிரமசிங்கபுரத்தை சார்ந்த அருண்குமார் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங், தனிப்படை காவலர் போகன் குமார் , கல்லிடைக்குறிச்சி உதவி ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், சிறார்கள் துன்புறுத்தல், உள்ளிட்ட 7 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில், புகார் கொடுத்தவர்கள் சார்பில் 4 பேருக்கு சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி சங்கர் சம்மன் அனுப்பியதன்பேரில், அவருடைய வழக்கறிஞர்கள் நெல்லையில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜரானார்கள்.
அவர்களுடன் புகார் கொடுத்த அருண்குமாரின் தாயார், ராஜேஸ்வரி அவரது கணவர் கண்ணன் மற்றும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுவர் ஒருவரும் ஆஜரானார்கள்.
அப்போது அவர்கள் சார்பில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் 'சம்பவம் நடந்து 50 நாட்களுக்கு பின்புதான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருக்கும் காவல் அதிகாரிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். ஐ.பி.எஸ் அந்தஸ்துடன் உள்ள ஐ.ஜி தலைமையில் இந்த வழக்கு கண்காணிக்கப்பட வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
மேலும், 'அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் பணியாற்றிய காவல் ஆய்வாளர்களும் வழக்கில் சேர்க்கப்பட வேண்டும்' என்றும் விசாரணை அதிகாரி டி.எஸ்.பி. சங்கரிடம் மனு அளித்தனர்.
இதுபற்றி பாதிக்கப்பட்ட அருண்குமாரின் வழக்கறிஞர் பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, 'அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வு தொடர்பாக அருண்குமார் கொடுத்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
50 நாட்கள் கழித்து, பல்வீர் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள்தான் தொடர்ந்து விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனர். இதுவரை ஐ.பி.எஸ் பல்வீர் சிங் அதிகாரி கைது செய்யப்படவில்லை.
இந்த வழக்கை மேற்பார்வை செய்ய ஒரு அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும். சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இந்த வழக்கில் அம்பாசமுத்திரம் கல்லிடைகுறிச்சி, சிங்கபுரம் காவல் நிலையங்களில் சித்திரவதை செய்த அப்போதைய 3 காவல் ஆய்வாளர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட வேண்டும்.
வழக்கு ஆவணங்கள் தொடர்பாக கேட்கப்படும் கேள்விகளுக்கு உரிய பதில் கிடைப்பதில்லை. மருத்துவத்துறையும் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு ஆதரவாகவே செயல்படுகிறது' என குற்றம்சாட்டினார்.