தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்தடுத்து நடந்து வரும் கொலை கொள்ளை சம்பவங்கள் ஆளும் அரசுக்கு கடுமையான அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு, சாத்தான்குளம் தந்தை மகன் அடித்து கொலை வரிசையில் தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு மிகப்பெரிய களங்கம் ஏற்படுத்தியது.
காவல்துறை மீது விழுந்துள்ள இந்த கரையை அகற்ற காவல்துறை அதிகாரிகள் போராடி வருகிறார்கள். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்கு தயாராக வைத்திருந்த 150 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினார்கள்.
இந்த கஞ்சா இலங்கைக்கு படகு மூலம் அனுப்பப்பட்டு பாதி வழியில் திரும்பி வந்தது என்று சொல்கிறார்கள். இந்த கஞ்சா கடத்தல் விவகாரம் அடங்குவதற்குள் திருச்செந்தூருக்கு அருகில் இருக்கும் சாத்தான்குளத்தில் ஓர் தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 2,100 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதை மதுரை மாவட்ட தனிப்படை போலீசார் கைப்பற்றினார்கள்.
கஞ்சா கடத்தல் விவகாரம் காவல்துறையை கலகலக்க வைத்து கொண்டிருக்கும் போது, கயத்தாறு பகுதியில் இருந்து கேரளாவுக்கு கடத்தி செல்லப்பட்ட 40 டன் ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது. அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்கள் வருவாய் மற்றும் காவல்துறை மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தை கையில் எடுத்து பா.ஜ.க, அரசியல் செய்யத் தொடங்கி விட்டது. திருச்செந்தூரில் 150 கிலோ கஞ்சா சாத்தான்குளத்தில் 2,100 கிலோ கஞ்சா, கயத்தாரில் ரேஷன் அரிசி கடத்தல், தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் வி.ஏ.ஓ கொலை என்று பகிரங்கமாக போஸ்டர் அடித்து ஒட்டி வருகிறார்கள்.
இது குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் சித்ராங்கதனிடம் கேட்டோம். "விடியல் அரசு, திராவிட மாடல் அரசு என்று தி.மு.க-வினர் தம்பட்டம் அடித்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் தினந்தோறும் அரங்கேறும் இது போன்ற சம்பவங்கள் தான் விடியல் அரசுக்கு லட்சணமா? திராவிட மாடலுக்கு உதாரணமா? என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அதைத்தான் நாங்கள் போஸ்டர் ஒட்டி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம்" என்கிறார்.
- எஸ்.அண்ணாதுரை