ஈரோடு: எஸ்.பி அலுவலக வளாகத்தில் கஞ்சா விற்பனையா? - சிக்கிய 2 பேர்
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக கூறப்படும் புகாரில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் ஆபரேசன் 4.O என்ற பெயரில், கஞ்சா வேட்டை நடைபெற்று வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வாகனங்களில் டன் கணக்கில் கடத்தி வரப்படும் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இது தொடர்பாக சுமார் 600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பலரை கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஈரோடு எஸ்.பி அலுவலக வளாக பழைய நீதிமன்ற கட்டிடத்திற்கு அருகிலும், ஈரோடு எஸ்பி அலுவலக வாயிலில் உள்ள பேருந்து நிறுத்தத்திலும், மர்ம நபர்கள் சிலர் கஞ்சா விற்பனை செய்து வந்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
அதன் பேரில், எஸ்.பி. அலுவலக வளாகத்தில் போலீசார் இன்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, போலீசாரை கண்டதும் அங்கிருந்த சிலர் தப்பியோடினர்.
இதில், கஞ்சா விற்பனை செய்த 2 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், அவர்கள் பெயர் சந்தோஷ்ராஜ் மற்றும் சண்முகம் என தெரிய வந்துள்ளது. அவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.