வேலூர் மாவட்டம், கணியம்பாடி தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளரும், ஒன்றியக் குழுத் துணைத் தலைவருமான கஜேந்திரனிடம், ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறி பணம் பறிக்க முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், கணியம்பாடி தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் மற்றும் ஒன்றியக் குழுத் துணைத் தலைவராக இருப்பவர் கஜேந்திரன்.
இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய செல்போன் எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், "தனது பெயர் சுபாஷ், ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும், தலைமைச் செயலகத்திலிருந்து பேசுகிறேன்.
உங்களைப் பற்றி நிறைய புகார்கள் வந்துள்ளது. உடனே என்னை அடுக்கம்பாறையில் வந்து சந்தியுங்கள்" என கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டார். மேலும், அவர் பேசும்போது, கடுமையான சொற்களை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால், பதற்றம் அடைந்த கஜேந்திரன், இது தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார். அவர்களது ஆலோசனையின் பேரில், வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், இது தொடர்பாக, வேலூர் எஸ்.பி மணிவண்ணனிடம் புகார் தெரிவித்தார்.
இந்த நிலையில், போலீஸார் அந்த செல் நம்பரின் சிக்னலை ஆய்வு செய்து, விசாரணை நடத்தினர். இதில், கஜேந்திரனிடம் பேசியது, போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி என கண்டுபிடித்தனர்.
பின்னர், அடுக்கம்பாறை சென்ற போலீசார் அந்த நபரை பிடித்து, விசாரணை நடத்தினர். இதில், அவர் பெயர் சுபாஷ் என்பதும், சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
இதே போல், அவர் பல்வேறு பகுதிகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறி பணம் பறித்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, சுபாஷை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.