திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வீட்டின் அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழனியைச் சேர்ந்த சாலமன் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரும் நெருக்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் வீட்டின் அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது சாலமன் மற்றும் மாரிமுத்துவை கண் இமைக்கும் நேரத்தில் மர்ம நபர்கள் கூர்மையான அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில், சாலமன் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவருக்கும் ரத்தம் பீறிட்டுக் கொட்டியது.
இதில், படுகாயம் அடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்துச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். இதில், சாலமன் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நகை பறிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்றது தெரிய வந்தது. மேலும், போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.