திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே குடிபோதையில் தொடர்ந்து துன்புறுத்தி வந்த கணவனை, மனைவியே இரும்புக் குழாயால் மர்ம உறுப்பில் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வத்தலக்குண்டு அருகே தெற்கு விராலிப்பட்டியைச் சேர்ந்த முத்தையா என்பவரது மகன் வீரய்யன்(35). கட்டிடத் தொழிலாளியான இவருக்கு நீண்ட நாட்களாகவே குடிப்பழக்கம் இருந்து வந்ததுள்ளதாகக் கூறப்படுகிறது.
இவருக்கும் அபிராமி (31) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. அபிராமியும் விவசாயக் கூலி வேலைகளுக்குச் சென்று வந்தார்.
இந்தத் தம்பதிக்கு 2 பெண் குழந்தை , 1 ஆண் குழந்தை என 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் , வீரய்யன் தொடர்ந்து குடிப்பழக்கத்திற்கு அடிமையாக மனைவி அபிராமியை இரவு, பகல் பாராது துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கணவன்- மனைவி இடையே சண்டை நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில், வழக்கம் போல் வீரய்யன் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவி அபிராமியுடன் சண்டையிட்டுத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால், பொறுமையிழந்த அபிராமி அருகே இருந்த இரும்புக் குழாயால் வீரய்யன் மர்ம உறுப்பில் குத்தியுள்ளார் . இதில் இரத்த வெள்ளத்தில் நிலை தடுமாறி வீரய்யன் அதே இடத்தில் சரிந்து உயிரிழந்தார்.
தகவலறித்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீரய்யன் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவான அபிராமி மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரைக் கைது செய்தனர்.