தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டை சட்ட விரோதமாக விற்பனை செய்த தி.மு.க 44-வது மாமன்ற உறுப்பினர் மார்த்தாண்டன் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில், ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தி.மு.க மாமன்ற உறுப்பினர் மார்த்தாண்டன் உட்பட 2 பேர் தலைமறைவாகியுள்ளனர்.
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் அமோகமாக விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் மாநகராட்சி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மாநகராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள இரும்பு கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதை கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அங்கு உள்ளே நுழைந்து திடீரென சோதனை நடத்தினர். அதில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 3,500 ரூபாய் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதில், லாட்டரி சீட்டுகளைப் பதுக்கி விற்பனை செய்த திண்டுக்கல் மாநகராட்சி 44- வது வார்டு தி.மு.க உறுப்பினர் மார்த்தாண்டன் அவரது நண்பர்கள் அசோக் ஜான், முருகசங்கர் ஆகியோர் மீது, திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதில், அசோக் ஜான் என்பவரை கைது செய்த போலீசார், தப்பியோடிய தி.மு.க மாநகராட்சி 44-வது வார்டு உறுப்பினர் மார்த்தாண்டன் மற்றும் முருகசங்கர் ஆகியோரை தேடி வருகின்றனர்.