தர்மபுரி: லாரி டியூப்புகளில் 500 லிட்டர் கள்ளச்சாராயம் கடத்திய கும்பல் - மடக்கிப் பிடித்த போலீசார்
தர்மபுரி அருகே லாரி டியூப்புகளில் 500 லிட்டர் கள்ளச்சாராயம் கடத்திய கும்பலைச் சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் மடக்கிப்பிடித்தனர். தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த மலை கிராமமான சிட்லிங்கில் உள்ள வேடியப்பன் கோவில் அருகே, காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி, அதில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதனால், போலீசார் சந்தேகமடைந்து, வாகனத்தில் சோதனை செய்தனர். அதில், காய்கறிகளை கொண்டு செல்லும் பிளாஸ்டிக் கூடைகளுக்கு அடியில், லாரி டியூப்புகளில் கள்ளச்சாராயம் கடத்தியது கண்டு பிடிக்கப்பட்டது.
அப்போது, சரக்கு வாகனத்தில் வந்தவர்கள் தப்பி ஓட முயன்றுள்ளனர். அதில், ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மற்றொருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் அவர், கள்ளக்குறிச்சி மாவட்டம், ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் என்பதும், அங்கிருந்து விற்பனைக்காக 500 லிட்டர் சாராயத்தை லாரி டியூப்களில் அடைத்து வைத்து கடத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீசார், ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் என்பவரை கைது செய்தனர். கடத்தப்பட்ட 500 லிட்டர் சாராயம் மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர். தலைமறைவான நபரை தேடி வருகின்றனர்.