தமிழக முன்னாள் உள்துறை அமைச்சர் கக்கனின் மகன் டாக்டர் சத்யநாதன் காலமானார். அவரது மறைவுக்கு தி.மு.க தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் போராட்ட வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் போன்ற பதவிகளை வகித்தவர் கக்கன். அதுமட்டுமல்ல, கடந்த 1957-ம் ஆண்டு முதல் 1967 -ம் ஆண்டு வரை காமராஜர் தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தவர். நேர்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய அரசியல் தலைவர்.
இவரது மூன்றாவது மகன் டாக்டர் சத்தியநாதன். இவர் அரசு மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், இவர் சமீபத்தில் மருத்துவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை லாயிட்ஸ் காலனியில் வசித்து வந்தார். இந்த நிலையில், டாக்டர் சத்தியநாதன், தனது வீட்டில் வழுக்கி விழுந்து மரணமடைந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.
டாக்டர் சத்தியநாதன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில் ,
“தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சரும், அப்பழுக்கற்ற பொதுவாழ்க்கைக்கு அடையாளமாகத் திகழ்ந்தவருமான திரு. கக்கன் அவர்களது மகன் மருத்துவர் சத்தியநாதன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் மனவருத்தம் அடைந்தேன்.
அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.