திருச்சி: இரவோடு இரவாக தர்கா இடித்து தரைமட்டம் - மர்ம கும்பல் குறித்து போலீஸ் விசாரணை

திருச்சியில் உள்ள தர்காவை மர்ம நபர்கள் இரவோடு இரவாக இடித்து தரைமட்டமாக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இடிக்கப்பட்ட தர்கா
இடிக்கப்பட்ட தர்கா

திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகே மிகவும் பழைமை வாய்ந்த அன்னார் பாக் தர்கா என்ற தர்கா செயல்பாட்டில் இருந்தது. இந்த தர்காவில் அப்பகுதி இஸ்லாமியர்கள் தினம்தோறும் வழிபாடு நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் வக்ஃப் போர்டுக்கு சொந்தமான அன்னார் பாக் தர்காவை இன்று அதிகாலை மர்ம நபர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கிவிட்டனர் என்று தகவல் வெளியானது.

வக்ஃப் போர்டுக்கு சொந்தமான 194 சென்ட் நிலம் 400 சதுர அடியில் அமைக்கப்பட்டிருந்த அன்னார் பாக் தர்காவை இடித்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அந்தப் பகுதி இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து இந்த தர்காவை பராமரித்து வரும் பஷீர் அகமது என்பவர் தில்லைநகர் காவல் நிலையத்தில் தர்காவை இடித்த 10க்கும் மேற்பட்டவர்கள் மீது புகார் அளித்துள்ளார்.

தர்கா இடிப்பு குறித்து அறிந்த தில்லை நகர் காவல் துறையினர் உழவர் சந்தைப் பகுதியில் உள்ள இஸ்லாமியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதாக உத்தரவாதம் அளித்தனர்.

மேலும், அருகில் இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை வைத்து மூன்று நபர்களை அடையாளம் கண்ட காவல்துறையினர் அவர்களை கைது செய்ய தேடி வருகின்றனர்.

இதுதொடர்பாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தர்க்கா அமைந்து இருக்கக்கூடிய நிலம் தொடர்பான வழக்கு ஏற்கனவே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

தென்னூர் பகுதியில் இஸ்லாமியர்கள் பயன்படுத்தி வந்த தர்கா இடிக்கப்பட்ட சம்பவம் திருச்சி முழுவதும் உள்ள இஸ்லாமியர் மத்தியில் பரவியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் பெருமளவு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

- திருச்சி ஷானு

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com