சீர்காழியில் மின் கம்பங்களில் "தீ" பந்தம் ஏற்றி வைத்த பொதுமக்கள் - என்ன காரணம்?

அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதாக மக்கள் வேதனை
பொதுமக்கள் போராட்டம்
பொதுமக்கள் போராட்டம்

சீர்காழி நகரில் தெரு மின்விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் மின் கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றி வைத்து இரவினை கடக்கும் சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மயிலாடுதுறை அருகே அருண்மொழித்தேவன் ஊராட்சி உக்கடை கிராமத்தில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக அடிக்கடி மின் தடை ஏற்படுவதைக் கண்டித்தும், புதிய மின்மாற்றி அமைக்கக்கோரியும் பா.ம.க ஒன்றிய செயலாளர் மதிவாணன் தலைமையில் பொதுமக்கள் நீடூர் மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதிய மின்மாற்றி அமைக்க மின் சாதனப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டும் மின்மாற்றி அமைக்கப்படவுள்ள இடம் தனியாருக்கு சொந்தமான இடமாக இருப்பதால், அதன் உரிமையாளர் இப்பணியை தடுத்து நிறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் இது தொடர்பாக ’மாற்று இடம் ஏற்பாடு செய்து மின்மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்த சாலைமறியல் போராட்டத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த போராட்டம் ஒருபுறம் இருக்க, சீர்காழி நகரில் தெருவிளக்குகள் எரியாததால் மின் கம்பங்களில் தீப்பந்தங்களை ஏற்றி இரவுப்பொழுதை கழித்துவரும் பொதுமக்கள் தொடர்பான செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட திருக்கோலக்கா தெரு, திரௌபதி அம்மன் கோவில், பிடாரி அம்மன் தெரு ஆகிய பகுதிகளில் சுமார் ஏராளமான குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில், நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள தெரு மின் விளக்குகள் நகராட்சி ஊழியர் மூலம் மாலை எரிய விடப்பட்டு பின்னர் அதிகாலை நிறுத்தப்படுவது வழக்கம்.

இந்த நிலையில், தெரு மின்விளக்குகள் சில நாட்களாக சரிவர எரியாமல் நாள் முழுவதும் இருண்டு கிடந்துள்ளது. இதனால், அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் அவதியடைந்தனர்.

இது தொடர்பாக, அந்த மக்களிடம் பேசினோம். “ இரவு நேரங்களில் பள்ளி மற்றும் டியூஷன் சென்று விட்டு வீடுகளுக்கு திரும்பும் மாணவ மாணவிகள், வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் பொதுமக்கள் என பலரும் இருண்டு கிடக்கும் சாலையில் நடந்து செல்வதற்கு அச்சமாக உள்ளது.

சாலையில் தேள் , பாம்பு ஆகிய விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதோடு, நடந்து செல்வோர் இவைகளால் அதிகம் பாதிக்கப்படும் சூழலும் தற்போது ஏற்பட்டுள்ளது.

அத்துடன், மேற்படி விஷ ஜந்துகள் இருட்டில் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. சில குழந்தைகளை தேள் கடித்தும் இருக்கிறது. சைக்கிளில் செல்வோர் எதிரே ஆட்கள் வருவது கூட தெரியாமல் அவர்கள் மீது விபத்து ஏற்பட்டு காயமும் அடையும் சம்வமும் அதிகரித்திருக்கிறது.

இதனால், நாங்கள் இரவு தீப்பந்தங்களை கொளுத்தி மின் கம்பத்தில் கட்டியும், மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தும் சாலைகளில் நடமாடவேண்டிய மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்“ என்றனர் பரிதாபக்குரலில்

இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, “புகார் கூறிய மறுநாளே தெரு மின் விளக்குகள் சரி செய்யப்பட்டு அனைத்தும் நல்லமுறையில் எரிந்து வருகிறது.

அந்த பகுதி கவுன்சிலருக்கும் அங்குள்ள பொதுமக்கள் சிலருக்கும் உள்ள சில கருத்து வேறுபாடு காரணமாக தெரு விளக்குகள் எரியாததை பெரிய பிரச்னையாக்கி, அந்த மக்கள் இப்படி தீப்பந்தம் கட்டி பரபரப்பு ஏற்படுத்திவிட்டனர். அவ்வளவுதான்.” என்றனர்.

- ஆர்.விவேக் ஆனந்தன்

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com