கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் என்.எல்.சி இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிகளை அ.தி.மு.க எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் தடுத்து நிறுத்தினார்.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் என்.எல்.சி இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிகளுக்கு நிலம், மனைகள் கையகப்படுத்துவது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், என்.எல்.சி அதிகாரிகள் ஜே.சி.பி எந்திரங்கள் மற்றும் கனரக வாகனங்களைக் கொண்டு ரகசியமாக பிரச்சனைக்குரிய இடத்தில் பல்வேறு பணிகளை செய்து வந்தனர்.
இதனை அறிந்த கிராம மக்கள் அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டனர். அப்போது, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புவனகிரி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் நேரில் வந்து பணிகளில் ஈடுபட்டிருந்த நபர்களிடம், 'பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கை, வாழ்வாதர பிரச்சனை தீர்க்காமல் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது' என எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், 'தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இது பற்றி சுமுகமான தீர்வு எட்டப்படும் என தலைமைச் செயலர் தெரிவித்திருந்த நிலையில் ஏன் இந்த ரகசிய பணிகள் செய்யப்படுகிறது?' என கேள்வி எழுப்பினார்.
'என்.எல்.சி நிலக்கரி எடுக்கும் பணிக்கு போதுமான நிலங்கள் கைவசம் இல்லாமல் இருப்பதால், நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் நிலக்கரி பற்றாக்குறை சமாளிக்க நிலக்கரி எடுப்பதற்கான நிலங்களை எடுத்துதரப்படும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் மற்றும் என்.எல்.சி தலைவர் தனித்தனியாக அறிவித்திருக்கும் இந்த அறிவிப்பு மக்களின் கோரிக்கைகள் பற்றியோ அவர்களின் உரிமைகள் பற்றியோ எவ்வித அக்கறை கொண்டதாகவும் தெரியவில்லை.
என்.எல்.சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இப்பகுதி மக்களின் சமகால இழப்பீடு வழங்க வேண்டும். வீட்டில் ஒருவருக்கு நிரந்தர அரசு வேலை வழங்க வேண்டும்.
இதை செய்யாமல் எந்த பணிகளையும் மேற்கொள்ள முடியாது அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்' என்றார்.
இதனையடுத்து, என்.எல்.சி நிர்வாகத்தின் ரகசிய பணிகளை மேற்கொண்டு இருந்த கனரக வாகனங்கள் அவசர அவசரமாக திருப்பி எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- பெ.கோவிந்தராஜூ