விருத்தாச்சலத்தில் தி.மு.க கவுன்சிலரால், 5 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில்,, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சீல் வைத்தது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் வைத்திலிங்கா மழலையர் பள்ளியில், பயின்ற 5 வயது சிறுமி -யை, அப்பள்ளியின் தாளளரும், 30-வது வார்டு தி.மு.க கவுன்சிலருமான பக்கிரிசாமி, பாலியல் வன்கொடுமை செய்த சம்பவமானது தமிழகத்தேயே உலுக்கியது.
கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற்ற இச்சம்பவத்தில், சம்பந்தப்பட்ட தி.மு.க கவுன்சிலர் பக்கிரிசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து , கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 26 ஆம் தேதி, கொடுஞ்செயல் குற்றத்தை தடுக்கும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், தி.மு.க கவுன்சிலர் பக்கிரிசாமி மீது, ஓராண்டு தடுப்பு காவலில் வைக்கும் குண்டர் சட்டம் பாய்ந்தது.
இந்த நிலையில் புது டெல்லியில் இருந்து வருகை தந்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் மருத்துவர் ஆனந்த், பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்ற தி.மு.க கவுன்சிலருக்கு சொந்தமான, வைத்தியலிங்கா மழலையர் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்பள்ளியில் பயின்ற 101 குழந்தைகளுக்கும் வருகின்ற திங்கட்கிழமைக்குள், மாற்றுப் பள்ளியில் படிப்பதற்கு உண்டான சான்றிதழ்களை வழங்கிட வேண்டும் என மாவட்ட கல்வி அதிகாரியிடம் உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து, பள்ளியில் உள்ள ஆதாரங்கள் அனைத்தும் பாதுகாக்கும் வகையில், ஆணையரின் உத்தரவின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் முன்னிலையில், வருவாய்த்துறை அதிகாரிகள், பள்ளிக்கு சீல் வைத்தனர்.
இதனிடையே, விருத்தாச்சலம் கடலூர் சாலை அமைந்துள்ள, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஆய்வு மாளிகையில், திமுக கவுன்சிலர் பாதிக்கப்பட்ட பள்ளி சிறுமி மற்றும் சிறுமியின் பெற்றோர்களிடம், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் விசாரணை மேற்கொண்டார்.
பின்னர், பத்திரிகையாளர் சந்திப்பில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையர் ஆனந்த் கூறுகையில், கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து, இந்த பள்ளிக்கு அங்கீகாரம் பெறவில்லை. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆணையம் மூலமாக நீதி பெற்றுத்தரப்படும் இதுபோல் துரதிஷ்டவசமான சம்பவங்கள் இனி தமிழகத்தில் நடக்க கூடாது என்றார்.
மேலும், கடந்த 9 வருடங்களாக பள்ளியின் உரிமம் புதுப்பிக்கப்படாமல் இருப்பதற்கான காரணத்தை ஆய்வறிக்கும் மூலம் ஆணையத்தில் தெரிவிப்பதாகவும், அது குறித்து அதிகாரிகள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
பி.கோவிந்தராஜு