கவுன்சில் கூட்டம் ரத்து: பின்னணியில் ரியல் எஸ்டேட் புள்ளிகள்? - பரபரப்பு புகார்

அமைச்சர் செந்தில்பாலாஜி ஊரில் இல்லாத நிலையில் மக்கள் பிரச்னையில் அக்கறை காட்டவில்லை
கவுன்சில் கூட்டம் ரத்து: பின்னணியில் ரியல் எஸ்டேட் புள்ளிகள்? - பரபரப்பு புகார்

ஆறு ரியல் எஸ்டேட் அதிபர்கள் தங்களது வீட்டு மனை பிரிவுகளை அங்கீகாரம் பெற, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சியில் தீர்மானம் கொண்டு வந்தனர்.

அப்போது, அந்த தீர்மானம் நிறைவேறவில்லை. நேற்று நடந்த கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேறவில்லையென்றால், கோர்ட்டுக்கு போக வேண்டும் கோர்ட்டில் 10 ஆண்டுகள் போராட வேண்டியிருக்கும், அதை தடுக்க தலைவர் மூலம் 10 மணிக்கு நடக்கவிருந்த பேரூராட்சி கூட்டத்தை 9 மணிக்கு தலைவர் ரத்து செய்தார் என்று கொதிக்கிறார்கள் கவுன்சிலர்கள்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பேரூராட்சி கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு நடக்க இருக்கபாதாக மொத்தமுள்ள 15 உறுப்பின்ர்களுக்கும் அஜண்டா அனுப்பப்பட்டது.

அதன்படி, அனைத்து உறுப்பினர்களும் கூட்டத்து வர தயாரான நிலையில் பேரூராட்ச் ஊழியர்கள் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் போன் போட்டு கூட்டம் ரத்து என்று சொலிலியுள்ளார். இருந்தாலும் என்ன காரணத்திற்காக கூட்டம் ரத்து என்று கேட்க பேரூராட்சி அலுவலகம் வந்த போது பேரூராட்சி நிர்வாக அதிகாரி தலைவர் ஜெயந்தி ஊருக்கு செல்கிறார் என்று சொல்லியுள்ளார்கள்.

தலைவர் ஊருக்கு சென்றால் உதவி தலைவர் தங்கராசு இருக்கிறார் அல்லவா? அவரை வைத்து கூட்டத்தை நடத்துங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கையில், அங்கிருந்த நிர்வாக அதிகாரி ஆனந்தன் நான் திண்டுக்கல் செல்கிறேன் கூட்டம் ரத்து என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார்.

இதனால், ஆவேசமடைந்த உறுப்பினர்கள், மக்கள் பிரச்சனைகாக, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத்தான் கூட்டம் நடத்துகிறீர்கள். இதை சரியான காரணம் இல்லமால் ரத்து செய்தது தவறு என்று கொதித்தனர்.

மேலும், இது தொடர்பாக, முதல்வர், உள்ளாட்சி துறை அமைச்சர், கலெக்டர், ஆகியோர்களுக்கு ரத்து செய்தது பற்றி புகார் அனுப்பிய நிலையில், பேரூராட்சி துணை தலைவர் தங்கராஜிடம் பேசினோம், கடந்த முறை நடந்த பேரூராட்சி கூட்டடத்தில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் தங்களது சைட்களை அங்கீகரிக்க தீர்மானம் கொண்டு வந்தார்கள்.

அரசு விதிகளுக்கு மீறி இருந்ததால் தீர்மானம் நிராகரிப்பட்டது. இந்த முறை அதே தீர்மானம் வந்தது. அதை மன்றத்தில் வைக்க இருந்த நிலையில் கூட்டத்தை ரத்து செய்துள்ளார்கள்.

காரணம், இந்த முறையும் தீர்மானம் நிறைவேறவில்லை என்றால் கோர்ட்டுக்குத்தான் போகவேண்டிய நிலை. அதனால், ரியல் எஸ்டேட் காரர்கள் யோசனைப்படி கூட்டத்தை ரத்து செய்திருக்கிறார்கள்.

தலைவர் ஊரில் இல்லை என்று காரணம் சொல்கிறார்கள். தலைவர் இல்லையென்றால் நான் உதவித்தலைவர் நான் கூட்டம் நடத்தலாம் நான் கூட்டம் நடத்தினால் அரசு விதிகளுக்கு உட்பட்டு தீர்மானம் நிறைவேறாமல் போய் விடும் என்பதால் கூட்டத்தையே ரத்து செய்துள்ளார் தலைவர்.

அப்போது, துணை தலைவரான நான் என்ன டம்மியா? எத்தனையோ மக்கள் பிரச்சனைகளை தீர்க்க வேண்டிய தீர்மானங்கள் இருக்கும் நிலையில் வாய் மொழியாக கூட்டத்தை ரத்து செய்தது தலைவரின் தன்னிச்சையான போக்கு.

அமைச்சர் செந்தில்பாலாஜி ஊரில் இல்லாத நிலையில் மக்கள் பிர்ச்சனையில் அக்கறை காட்டாமல் ரியல் எஸ்டேட் அதிபர்களுக்காக கூட்டத்தை ரத்து செய்ததை மன்னிக்க முடியாது என்றார்.

இது பற்றி கம்யூனிஸ்ட் உறுப்பினர் கணேசனிடம் கேட்டோம், கூட்டத்தை ரத்து செய்தது ஜனநாயக படுகொலை. தலைவர் ஜெயந்தி தன்னிச்சையாக செயல்படுகிறார். துணை தலைவரை வைத்து கூட்டம் நடத்தவேண்டும். ஆட்சிக்கு தலைவர் கெட்ட பெயர் ஏற்படுத்துகிறார் என்றார்.

இது பற்றி பேரூராட்சி நிர்வாக அதிகாரி ஆனந்தனிடம் விளக்கம் கேட்டோம், அன்று நான் திண்டுக்கல் அலுவலக வேலையாக சென்றுவிட்டேன். தலைவர் கூட்டத்தை ரத்து செய்ய சொன்னார் அதை செய்துவிட்டேன் என்றார்.

தலைவர் ஜெயந்தியிடம் கேட்டோம், நிர்வாக காரணங்களுக்காக கூட்டம் ரத்து செய்யப்பட்டது என்றார். என்ன நிர்வாக காரணம் என்றோம், எனக்கு வெளியூரில் வேலை இருந்தது என்றவர், ரியல் எஸ்டேட் காரர்களுக்கு ஆதரவாக கூட்டத்தை ரத்து செய்தது என்று சொல்வது தவறு.

நான் நேர்மையாக ஒரு ரூபாய் லஞ்சம் வாங்காத தலைவராக வாழ்ந்து வருகிறேன். என் மீது அபாணடமாக புகார் கூறுபவர்கள் அதை நிரூபிக்க முடியுமா? என்று ஆவேசமானார்.

- அரவிந்த்

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com