கோவை மாநகராட்சியின் நூறு வார்டுகளில் சேகரமாகும் குப்பைகள் வெள்ளலூர் மெகா குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகின்றன. இந்த கிடங்கினால் எப்போதுமே பிரச்னைகள், பஞ்சாயத்துகள்தான்.
காரணம், இங்கிருந்து வீசும் தூர்நாற்றத்தால் சுற்றியுள்ள குடியிருப்பு மக்கள் கடும் அவதிக்கு ஆளாவது ஒரு பிரச்னை, திடீரென இந்த குப்பைக் கிடங்கு தீ பிடித்துவிட்டால் அணைப்பதற்கு ஒரு வாரத்துக்கு மேலாகிவிடும். அதற்குள் சுற்றுவட்டார ஏரியா மனிதர்களுக்கு கண்கள் பழுத்து, மூச்சு திணறல் உருவாகிவிடும்.
அந்தளவுக்கு மிக மோசமான சூழல் ஏற்படும். இந்த குப்பைக் கிடங்கு விவகாரத்தில் உருப்படியான நடவடிக்கை எடுக்கச் சொல்லி பல முறை மக்கள் போராட்டம் நடத்திவிட்டார்கள். ஆனால் எந்த பலனுமில்லை.
இந்த நிலையில், கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 7-ம் தேதியன்று, இந்த குப்பைக்கிடங்கில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் சேகரித்துக் கொண்டிருந்த சிவகாமி என்பவர் லாரி மோதியும், அதிலிருந்த குப்பை அவர் மீது சரிந்ததில் உயிரிழந்தார்.
அவரது மரணத்துக்கு இழப்பீடு வேண்டி தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர்கள் முறையிட்டனர். இதற்கு விளக்கம் கேட்டு கோவை மாநகர போலீஸ் கமிஷனருக்கு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இதனையடுத்து, அன்று நடந்ததை விசாரித்து அதன் அடிப்படையில் ஒரு அறிக்கையை ஆணையத்துக்கு பதிலாக சமர்ப்பித்துள்ளார் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்.
அதில் “வெள்ளலூர் குப்பை கிடங்கில் சிவகாமி உயிரிழப்பு தொடர்பாக புலன் விசாரணை செய்யப்பட்டது. அவரது வலது பக்க விலா எலும்பில் முறிவு ஏற்பட்டு, மூச்சு திணறல் உருவாகி அவர் இறந்திருக்கிறார் என்று பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
மாநகராட்சி லாரியில் குப்பை கொண்டு வந்த டிரைவர், லாரியை பின்னோக்கி கவனக்குறைவாக இயக்கியுள்ளார். அப்போது லாரியில் இருந்த குப்பை சிவகாமி மீது சரிந்து மூடியதால் அவர் காயமடைந்து, மூச்சு திணறி இறந்துள்ளார்.
மாநகராட்சியின் குப்பை வண்டி ஓட்டுனரே இந்த மரணத்துக்கு காரணம். ஆனால் அவர் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக மாநகராட்சியின் கமிஷனருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆக, சிவகாமியின் இறப்புக்கு காரணம் என்ன? என்பது அதிகாரப்பூர்வமாக தெரிந்துவிட்டது, ஆனால், யார் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் இழப்பீடு வழங்க வேண்டிய பொறுப்பானது இரண்டு கமிஷனர்களுக்கு இடையில் பந்து போல் உருண்டு கொண்டிருக்கிறது.
- கோவை ஷக்தி