கோவையில் நகைக்காக சாலையில் சென்ற பெண்ணை காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் தரதர என இழுத்துச் சென்ற சி.சி.டி.வி. காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சிங்காநல்லூர் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் உள்ள பிரதான சாலை ஒன்றில் கௌசல்யா என்பவர் நடைபயிற்சி செல்வது வழக்கம். இவர், இன்று வழக்கம் போல் நடை பயிற்சிக்காக சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை காரில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சிலர் திடீரென கௌசல்யாவின் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறிக்க முயன்றனர்.
அவரது கழுத்தில் அணிந்த தங்க நகையை கொள்ளையர்கள் பற்றி இழுத்ததால், காருடன் கௌசல்யா சிறிது நேரம் தரதர என இழுத்துச் செல்லப்பட்டார். செயினை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டதால் கொள்ளையர்கள் தப்பியோடினர். நகை பறிக்க விடாமல் கௌசல்யா, நகை மேல் கையைவைத்து தடுத்துவிட்டார். மேலும், மயிரிழையில் உயிர் தப்பினார்.
இது சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் கௌசல்யா புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பான சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சி.சி.டி.வி-யில் பதிவான காட்சிகளை வைத்து, கொள்ளையர்கள் யார், அவர்கள் பயன்படுத்திய கார் பதிவு எண் உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.