சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள 114 கிரவுண்ட் நிலத்தை தோட்டக்கலை சங்கத்திடம் இருந்து மீட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்கும் படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள 4 காணி, 18 கிரவுண்ட், 1683 சதுர அடி (114 கிரவுண்ட் 534 சதுர அடி) நிலத்தை தனியார் நிலமாக அங்கீகரித்து, தோட்டக்கலை சங்கத்துக்கு பட்டா வழங்கி 2011-ம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்து கடந்த ஜூன் 5 -ம் தேதி நில நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து தோட்டக்கலை சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, நிலத்தை அரசு எடுத்த்து சரி எனக் கூறி, தோட்டக்கலை சங்கம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தோட்டக்கலை சங்கம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நூறு கிரவுண்ட் நிலத்தை எடுத்துக் கொண்ட அரசு, 400 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளதாகவும், எந்த ஆவணங்களையும் சரிபார்க்காமல் தனி நீதிபதி, தங்கள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதாகவும் தோட்டக்கலை சங்கம் தரப்பில் வாதிடப்பட்டது.
தமிழக அரசுத்தரப்பில், அவசரகதியில் நிலம் ஆர்ஜிதம் செய்யவில்லை. போதுமான விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டபட்ட பிறகே வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக புகார்தாரர் தரப்பில், ஊழல் அதிகாரி ஒருவர், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்துக்கு தோட்டக்கலை சங்கத்துக்கு பட்டா வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், புகார்தாரருக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை அக்டோபர் 5 -ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.