'சென்னையில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் குறைய நகரில் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்களும், காவல்துறையினரின் இடைவிடாத உழைப்பு ஆகியவையே காரணம்' என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.
இது குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறுகையில், 'சென்னை மாநகரில் கடந்த காலத்தை ஓப்பிடும் போது, குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது. காரணம், போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், பல்வேறு இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் விரைவாக கண்டறிந்து உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
தற்போது, குற்றங்களை தொழில்நுட்பம் மூலம் கண்காணிப்பு செய்யப்பட்டு குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், குற்றங்களை தொழில்நுட்பம் மூலம் கண்காணிப்பை மேம்படுத்த, சென்னை நகரில் 60,997 சி.சி.டி.வி. கேமராக்கள் ஜியோ டேக் செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பான நகர திட்டத்தின் கீழ் 1,750 இடங்களில் 5,250 கேமராக்களும், மெகா சிட்டி திட்டத்தின் கீழ் 980 இடங்களில் 2,939 கேமராக்களும் நிறுவ திட்டமிட்டுள்ளோம்.
மேலும் 1,750 முக்கிய பகுதிகளில் 5,250 சி.சி.டி.வி. கேமராக்கள் அமைக்க உள்ளோம். சி.சி.டி.வி. கண்காணிப்பு பொது மக்களிடையே சிறந்த பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தியுள்ளது' என்றார்.
இதனிடையே, கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை 3 மாதங்களில், 188 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும், 2023-ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்களில், 88 கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன. இதில் 73 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.