சென்னை: திருஆரூரான் சர்க்கரை ஆலை விவகாரம் - ரூ.33 கோடியை 3 மாதங்களில் விவசாயிகளுக்கு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

விவசாயிகளின் உழைப்புக்கு கூடுதல் விலை கொடுத்தால் மட்டுமே விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்கும் என நீதிபதிகள் கருத்து
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

'கடலூரில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு ரூ.33 கோடியை 3 மாதங்களில் வழங்க வேண்டும்' என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விவசாய சங்கத் தலைவரான அய்யாக்கண்ணு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'தஞ்சாவூர் மற்றும் கடலூரில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலைக்கு அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்ததற்கான தொகையாக 157 கோடி ரூபாய் அளிக்க வேண்டியிருந்ததாக கூறியுள்ளார்.

ஆனால், தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை ஆலை நிர்வாகம் வழங்கவில்லை என்பதால் நிலுவைத் தொகையை தங்களுக்கு உடனே வழங்க உத்தரவிட வேண்டுமென' கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆலை நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'முழு தொகையும் தங்களால் வழங்க இயலாது, 57 சதவீத தொகையை வழங்க தயாராக இருப்பதாகவும்,

இதன்படி, தாங்கள் 78 கோடி ரூபாய் வழங்குவதாகவும், இதில் 45 கோடி ரூபாயை ஏற்கனவே டெபாசிட் செய்து விட்டதாகவும், அந்த தொகையில் 37 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விட்டதாகவும்' தெரிவித்தார்.

இதனையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், 'ஆலை நிர்வாகம் வழங்குவதாக ஒப்புக்கொண்ட 78 கோடி ரூபாயில் ஏற்கனவே 45 கோடி வழங்கப்பட்டு விட்டதாகவும், நிலுவையில் உள்ள 33 கோடி ரூபாயை 3 மாதங்களில் வழங்க வேண்டுமென' உத்தரவிட்டனர்.

மேலும், 'கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசு நிர்ணயித்த விலை நியாயமான சந்தை விலை கிடையாது எனவும், அவர்களின் உழைப்புக்கு கூடுதல் விலை கொடுத்தால் மட்டுமே விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்கும்' எனவும் தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com