சென்னை: 11-ம் வகுப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்தவர்களுக்கு துணைத்தேர்வு - உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகம் முழுவதும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 11-ம் வகுப்பு தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு 3 வாரங்களில் துணைத் தேர்வு நடத்த வேண்டும் என கேந்திரிய வித்யாலயா சங்கதனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11-ம் வகுப்பு தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தவர்கள், துணைத் தேர்வு எழுத அனுமதிப்பதாகவும், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களை துணைத் தேர்வு எழுத அனுமதிப்பதில்லை என்றும் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்த மாணவிக்கு, துணைத் தேர்வு எழுத சென்னை உயர் நீதிமன்றம், 2018-ல் அனுமதி வழங்கியுள்ளதாக, மாணவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கும், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்தவர்களுக்கும் பாரபட்சம் காட்டுவதாகவும் வாதிடப்பட்டது.

ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவு, குறிப்பிட்ட அந்த மாணவி வேறு பள்ளியில் சேர மாற்றுச் சான்று பெறுவதற்காகவே துணைத் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது. அந்த உத்தரவு இந்த வழக்குக்கு பொருந்தாது என்றும், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்தவர்களுக்கு துணைத் தேர்வு எழுத அனுமதியில்லை என்று விதிகள் உள்ளதாகவும் கேந்திரிய வித்யாலயா சங்கதன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 'மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு செல்ல வேண்டும். இது அவர்களின் எதிர்காலம் குறித்த விசயம்.

எனவே, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11-ம் வகுப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்தவர்களுக்கு 3 வாரங்களில் துணைத் தேர்வு நடத்த வேண்டும்' என கேந்திரிய வித்யாலயா சங்கதனுக்கு உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com