நிர்வாணமாகக் காட்டும் கண்ணாடி என கூறி நூதன மோசடியில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கும்பலைச் சென்னை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே உள்ள ஏராளமான தனியார் விடுதிகள் உள்ளன. இதில், ஒரு சில விடுதிகளில் சந்தேகம்படும்படி சிலர் தங்கி இருப்பதாகவும், அவர்களது செயல்களில் சந்தேகம் உள்ளதாகவும், காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலிசார் விடுதிகளில் திடீர் சோதனை செய்தனர்.
அப்போது, ஒரு அறையில் ஒரு துப்பாக்கி, 8 தோட்டாக்கள், செம்பு கலசங்கள், போலி அடையாள அட்டை மற்றும் கண்ணாடி ஆகியவற்றை கண்டு பிடித்தனர்.
இதையடுத்து, அந்த அறையில் இருந்த 4 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த 4 பேரும் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் சூர்யா, குபாய்ப், ஜித்து மற்றும் இர்சாத் என தெரிய வந்தது.
அவர்களிடம், தொடர் விசாரணை செய்தபோது, தங்களிடம் ஒரு வித்தியாசமான கண்ணாடி உள்ளது என்றும், அந்த கண்ணாடியின் விலை ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை உள்ளது என்றும், அந்த கண்ணாடியை அணிந்தால், டிரஸ் போட்டிருந்தாலும், நாம் யாரை பார்க்கிறோமே அவர்கள் நிர்வாணமாக தெரிவார்கள் என கூறி, பலரிடமும் கண்ணாடி விற்பனை செய்துள்ளனர்.
இதையடுத்து, அவர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் போலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.