சென்னையில், பட்டாக்கத்தியை வைத்து வீடுகள் முன்பு அடித்தும், இருசக்கர வாகனங்களை காலால் எட்டி உதைத்தும், கார்களின் கண்ணாடிகளை உடைத்தும் அட்டகாசம் செய்த நபர் காவல்துறையினரைக் கண்டதும் ஏரிக்குள் சென்று மறைந்து கொண்டார். அவரைப் பிடிக்க 3 மணி நேரமாக போலீசார் முயன்றும் அந்த முயற்சி பலிக்கவில்லை. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அம்பத்தூர் மாதனங்குப்பம் பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் சட்ட விரோதமாக பார் இயங்கி வந்தது. இதனை கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிகாரிகள் மூடினர்.
இதனால், மது பிரியர்கள் ஆங்காங்கே சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள காலி மனைகளில் அமர்ந்து மது அருந்துவதும், அப்போது, அவ்வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பெண்களை ஆபாசமாக பேசுவதும் தொடர்கதையாக இருந்தது.
இந்த நிலையில், நேற்று இரவு மது போதை தலைக்கு ஏறிய நிலையில் நபர் ஒருவர் முத்தமிழ் நகர் 2-வது பிரதான சாலை உள்ள வீடுகளில் பட்டாக்கத்தியை வைத்து அடித்தும், இருசக்கர வாகனங்களை காலால் எட்டி உதைத்தும், கார்களின் கண்ணாடிகளை உடைத்தும் அட்டகாசம் செய்தார்.
இதனால், பதற்றமடைந்த குடியிருப்பு வாசிகள் அம்பத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
போலீசார் வருவதை கண்டதும் அந்த நபர் அங்கிருந்த கொரட்டூர் ஏரிக்குள் இறங்கினார். போலீசார் 3 மணி நேரமாக அவரை பிடிக்க காத்திருந்தும் கடைசியில் அந்த முயற்சி வீணானது. இதனால், போலீசார் அந்த போதை ஆசாமியை எச்சரித்துவிட்டு போலீசார் அங்கிருந்து சென்றனர்.
கையில் பட்டாக்கத்தியை வைத்து கொண்டு மதுபோதையில் அட்டகாசம் செய்ததுடன், 3 மணி நேரமாக போலீசருக்கு தண்ணி காட்டிய நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.