சென்னை சிறுவர்களுக்கான போதை தடுப்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் இருந்து 7 பேர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகத் தப்பியோடிய சிறுவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகள் ஆகியோரை சென்னையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், இந்தப் பள்ளியில் இருந்த குற்ற வழக்குச் சம்பந்தப்பட்ட 33 சிறுவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதில், 31 பேரை காவல்துறையினர் கையும் களவுமாகப் பிடித்தனர்.
இந்த நிலையில், சிறுவர்கள் போதை தடுப்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் இருந்து 7 சிறுவர்கள் தப்பியோட்டிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தப்பியோடிய சிறுவர்கள் அனைவரும், சீர்திருத்த மையத்தின் கணக்காளரை தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பள்ளியின் இரும்பு கதவை திறந்து, அதன் வழியாகத் தப்பிவிட்டதாகப் பள்ளியின் நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.