சென்னை: பாலியல் புகாரில் சிக்கிய ஹரி பத்மனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு - முழு விவரம்

ஹரி பத்மன்
ஹரி பத்மன்

சென்னை கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் ருக்மணி அருண்டேல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் படித்த மாணவிகளுக்கு கல்லூரியின் நடனத்துறை உதவி பேராசிரியர் ஹரி பத்மன் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏப்ரல் 3ம் தேதி அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி, ஹரி பத்மன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்த போது, வளர்ச்சியை பிடிக்காத சக ஆசிரியர்கள், மாணவிகளைத் தூண்டி விட்டு ஹரி பத்மனுக்கு எதிராக பொய் புகார் அளித்துள்ளதாகவும், 2019-ம் ஆண்டு சம்பவம் நடந்ததாக கூறி, 4 ஆண்டுகளுக்கு பின் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஹரிபத்மன் தரப்பில் வாதிடப்பட்டது.

காவல் துறை தரப்பில், இந்த வழக்கு தொடர்பாக, 162 மாணவிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள், ஹரிபத்மன் மீது குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை கைது செய்ய வேண்டியுள்ளதால், ஜாமீன் வழங்க கூடாது எனவும் ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கும் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு மகளிர் ஆணையம் தரப்பில், 103 மாணவிகளிடம் விசாரித்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், விசாரணை குழுவை மாற்றியமைக்க கோரி 7 மாணவிகள் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம், ஜூன் 15ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி இளந்திரையன், ஹரிபத்மனின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூன் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும், இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்ற ஹரி பத்மன் தரப்பு கோரிக்கையையும் நீதிபதி நிராகரித்தார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com