சென்னை கடற்கரை சாலையில், மகனுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, தவறி விழுந்த ஜீனத் பேகம் என்ற பெண் மீது கார் மோதிய சம்பவத்தில் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் , கூனிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜீனத் பேகம். இவர் தனது மகன் அப்துல் ரசாக் உடன் சென்னை ஈ.சி.ஆர் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று திடீரென பிரேக் போட்டு நின்றது. இதனால், அப்துல் ரசாக் பைக்கும், அவர் முன்பு இருந்த பைக்கும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டது. இதில், பைக்கிலிருந்து அப்துல் ரசாக், அவரது தயார் ஜீனத் பேகம் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.
அப்போது, அந்த வழியே புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று, ஜீனத் பேகம் மற்றும் அவரது மகன் இருவர் மீதும் மின்னல் வேகத்தில் மோதியது. இதில், அவர்கள் இருவரும் மேலும் படுகாயம் அடைந்தனர்.
இதைக்கண்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிச்சென்று அவர்கள் இருவரையும் மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மருத்துமனையில், சிகிச்சை பலனின்றி ஜீனத் பேகம் உயிரிழந்தார்.
அவரது மகன் அப்துல் ரசாக் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிக்கிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து, போக்குவரத்துறை புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுரேகா எழில்