சென்னை அருகே ரூ.535 கோடி பணத்துடன் சென்ற லாரி ஒன்று நடுரோட்டில் பழுதாகி நின்றதால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து, வெளியூரில் உள்ள வங்கிகளுக்கு மிகுந்த பாதுகாப்பு கொண்ட லாரிகளில் பணம் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
இந்த முறை அதுபோலவே, சென்னையில் இருந்து விழுப்புரத்தில் உள்ள வங்கிகளுக்கு சுமார் 535 கோடி ரூபாய் கொண்டு செல்வது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, இன்று 2 லாரிகளில் ரூ.535 கோடி பணம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. அப்போது, தாம்பரம் அருகே 535 கோடி ரூபாய் கொண்டு சென்ற லாரி பழுது காரணமாக திடீரென நின்றுவிட்டது.
இதனால், கூடுதல் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியிடம் இருந்து தமிழக காவல்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனையடுத்து, 535 கோடி ரூபாய் பணத்துடன் நிற்கும் லாரிகளுக்கு, தாம்பரம் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், லாரி உண்மையிலேயே பழுதாகிவிட்டதா? அல்லது வேறு ஏதாவது சதி உள்ளதா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.