தமிழகம் முழுவதும் கஞ்சா வேட்டை 4.0 வேட்டையில், கடந்த 6 நாட்களில் 659 கஞ்சா வியாபாரிகள் மீது வழக்கு பதிவு செய்து, அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கஞ்சா உட்பட போதைப் பொருட்கள் ஒழிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.
அதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் கஞ்சா வேட்டை 1:0, 2:0 மற்றும் 3:0 நடந்து முடிந்தன. மீண்டும் கஞ்சா விற்பனை தலை தூக்கவிடாமல் தடுக்க கஞ்சா வேட்டை 4.0 அதிரடி நடவடிக்கை தமிழகம் முழுவதும் மே மாதம் முதல் தேதி நடைபெற்று வருகிறது.
கடந்த ஆறு நாட்களில் தமிழகம் முழுவதும் 659 கஞ்சா வியாபாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 5 பேர் பெண்கள் ஆவர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 728 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 41 வங்கி கணக்குகள் முடுக்கப்பட்டுள்ளன. அதே வேளையில் 15 டன் குட்கா மற்றும் 2 லாரிகள் தாம்பரத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாநகர காவல் ஆணையர்களும் கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களின் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.