தர்மபுரி அருகே உள்ள கடத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் திறந்தவெளியில் நிறுத்தப்பட்டு உள்ளதால், மாணவர்கள் பயன்படுத்தமுடியாத நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு அரசு பள்ளி படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா சைக்கிள்கள் சுமார் 500 வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு வழங்கப்படும் சைக்கிள் இங்கு பாதுகாப்பாக நிறுத்தப்படாமல் திறந்தவெளி பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக சாரல் மழையில் நனைந்தும், சுட்டெரிக்கும் வெய்யிலில் நிறுத்தப்பட்டும் உள்ளது. இப்படி, சைக்கிள்கள் திறந்த வெளியில் அலட்சியமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், சைக்கிள்களின் டயர், டியூப், சீட் கவர் உள்ளிட்ட பல்வேறு பாகங்கள் கடுமையாக சேதமடையும் நிலை உருவாகி வருகிறது.
இந்த சைக்கிள்கள் அதிகாரிகளின் அலட்சியத்தால் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படுவதற்கு முன்பாகவே பழுதடையும் நிலை உருவாகி வருகிறது.
கடந்த காலங்களில் பல்வேறு ஊர்களில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சைக்கிள்கள் மாணவர்கள் ஓட்டி செல்ல முடியாத நிலையில் பெயரளவுக்கு பூட்டப்பட்டு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சைக்கிள் பெற்றவர்கள் அந்த சைக்கிள்களை தூக்கிச் சென்று கடைகளில் கொடுத்து பல நூறு ரூபாய் செலவு செய்து சீர் செய்யும் நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில், தற்போது இந்த பள்ளியில் உள்ள சைக்கிள்கள் திறந்தவெளியில் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
- பொய்கை.கோ.கிருஷ்ணா