பிரபல அல்வா கடை மாஸ்டரின் மனைவி-குழந்தை மாயம் - என்ன நடந்தது?
குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பிரபல அல்வா கடை மாஸ்டரின் மனைவி மற்றும் குழந்தையை காணவில்லை. இதனால், அவர்களை யாரேனும் கடத்தி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வேலவன் புதுக்குளத்தைச் சேர்ந்தவர் ஆறுமுக கண்ணன். இவருக்கு சண்முக ஆனந்தி( 22) என்ற மனைவியும், முத்து இனியா என ஒரு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
ஆறுமுக கண்ணன் குழித்துறை அடுத்த மீனச்சலில் உள்ள ஒரு பிரபல அல்வா கடையில் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.
இதன் காரணமாக மீனச்சல் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து மனைவி குழந்தையுடன் தங்கி வசித்து வந்துள்ளார். ஆறுமுக கண்ணன் வேலைக்கு செல்லும் நேரங்களில் மனைவி வீட்டில் குழந்தையை கவனித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், வழக்கம்போல் அல்வா கடைக்கு சென்ற ஆறுமுக கண்ணன் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது, மனைவி மற்றும் குழந்தையை காணவில்லை.
இதனையடுத்து, சாத்தான்குளத்தில் உள்ள உறவினர்கள் வீடுகள் மற்றும் தெரிந்தவர்களிடமும் மனைவி மற்றும் குழந்தை குறித்து விசாரித்துள்ளார். ஆனால், அவர்கள் இருவர் குறித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதனால் மிகவும் மனவேதனை அடைந்தார். இதனையடுத்து, அடுத்து ஆறுமுக கண்ணன் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், களியக்காவிளை போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான ஷண்முக ஆனந்தி மற்றும் குழந்தையை யாரேனும் கடத்தி சென்றுள்ளார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.