ஆருத்ராவின் பல கோடி ரூபாய் மோசடி விவகாரத்தில், நடிகரும், தயாரிப்பாளரும், பா.ஜ.க. ஒ.பி.சி பிரிவு துணை தலைவருமான ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர்.
சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்த நிறுவனம், தங்களிடம் முதலீடு செய்யும் முதலீடாளர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி கொடுக்கப்படும் என ஆசை வார்த்தைக் கூறி ஒரு லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, ரூ.2,438 கோடி வசூல் செய்து மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பான புகார்களின் பேரில் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக பா.ஜ.க நிர்வாகி ஹரிஷ், மாலதி, பாஸ்கர், மோகன்பாபு, செந்தில் குமார், ஐயப்பன், ரூசோ உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி மீட்கப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய நடிகரும், தயாரிப்பாளரும், பா.ஜ.க. ஒ.பி.சி பிரிவு துணை தலைவருமான ஆர்.கே.சுரேஷை நேரில் ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பினர்.
இதனால், சம்மனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த ஆர்.கே.சுரேஷின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆர். கே சுரேஷ் தலைமறைவாக உள்ள நிலையில், 4 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. இந்த நிலையில், அவரது வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலிசார் முடக்கியுள்ளனர்.