அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே திருட்டுத்தனமாக மது பாட்டில்களை விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா -பழூர், மீன்சுருட்டி, உடையார் பாளையம் போன்ற பகுதிகள் மற்றும் கிராமங்களில், குடிசைத் தொழில் போல் டீக்கடை, பெட்டிக்கடை மற்றும் பொது இடங்களில், டாஸ்மாக் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி மறைத்து வைத்து சிலர் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.
அதன்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படி, சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் போலீசார் ஜெயங்கொண்டம் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, கல்லாத்தூர் ஏரிக்கரை பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து, சட்டவிரோதமாக விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுக்கா, முத்தரசூர் கிராமம், புதுத் தெருவை சேர்ந்த குமார் மகன் மணிவண்ணன் ( 27) என்று தெரிய வந்தது.
அவரிடம் இருந்து 64 மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, மணிவண்ணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
- பெ.கோவிந்தராஜூ