ஆம்பூர் அருகே ஆம்புலனஸ் வருவதற்கு காலதாமம் ஏற்பட்டதால், விபத்தில் சிக்கிய தனியார் வங்கி மேலாளர் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் நிலேஷ் பாபு. இவர் பெருங்குடியில் உள்ள தனியார் வங்கியில் மேலளாராக பணியாற்றி வருகிறார்.
இவர், தனது மனைவி அபூர்வா மற்றும் கார் ஓட்டுநர் ஹரிஷ் ஆகியோர் உடன் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் நடைபெறும் வங்கி ஊழியர்களுக்கான முகாமில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து காரில் சென்றுள்ளார்.
அப்போது, ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் உள்ள சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென சாலையில் முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த சென்னையை சேர்ந்த ஹரிஷ் மற்றும் காரில் பயணித்த நிலேஷ் பாபு ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த நிலேஷ் பாபுவின் மனைவி அபூர்வா சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
இதனைத்தொடர்ந்து, லாரிக்கு அடியில் சிக்கி விபத்துக்குள்ளான காரில் இருந்த மூவரையும் மீட்ட அப்பகுதி மக்கள் இதுகுறித்து உடனடியாக ஆம்புலன்ஸ்-க்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஆம்புலன்ஸ் வருவதற்கு காலதாமதம் ஆனதால் நிலேஷ் பாபு விபத்து நடைபெற்ற இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த ஓட்டுனர் ஹரிசை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.