வினையில் முடிந்த விளையாட்டு - விஷச்சோறான கூட்டாஞ்சோறு - திருச்சி சோகம்

சிறுவர்கள்
சிறுவர்கள்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிறுவர்கள் விளையாட்டாக சமைத்த கூட்டாஞ்சோறு விஷச்சோறாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், குளித்தலை தாலுக்கா, தோகைமலையை அடுத்துள்ளது நல்லகவுண்டம்பட்டி. இந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர்கள் சிலர் ஒன்றாக சேர்ந்து விளையாடி வந்தனர்.

தங்களிடம் இருந்த சிறிய தொகை பணத்தை ஒன்றாக திரட்டி, அருகில் உள்ள மளிகைக் கடையில் 15 பாக்கெட் நூடுல்ஸ் வாங்கியுள்ளனர். பின்னர், பெருமாள் என்கிற விவசாயின் தோட்டத்தில் போய் அங்கே கிடந்த கல்லை எல்லாம் சேர்த்து வைத்து, அடுப்பு தயார் செய்து அதில் சமைத்து சாப்பிட முடிவு செய்தனர்.

அப்போது, எண்ணெய் பற்றாக்குறையால் அவர்கள் சமைத்த நூடுல்ஸ் சட்டியில் ஒட்டி ஒட்டி வந்தது. உடனே இன்னும் கொஞ்சம் எண்ணெய் விட்டால் நன்றாக வரும் என்று அவர்களுக்குள் முடிவு செய்தனர். அக்கம் பக்கத்தில் தேடிய போது எண்ணெய் கிடைக்கவில்லை.

யார் வீட்டுக்காவது போய் எடுத்து வரலாம் என்றால், அங்கே கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது. அப்படியே பதில் சொன்னாலும் எண்ணெய் கொடுக்க மாட்டார்கள் என்பதால், பக்கத்தில் இருந்த ஒரு வீட்டில் பாட்டிலில் எண்ணெய் போன்று இருப்பதை பார்த்து அதை எடுத்து, சட்டியில் ஊற்றி நூடுல்ஸ் கிண்டி சாப்பிட்டுள்ளனர்.

சிறிது நேரம் விளையாடி விட்டு அசதியாக வரவே அனைவரும் அவரவர் வீடுகளுக்கு சென்றனர். ஆனால், வீட்டிற்கு சென்ற பின் ஒவ்வொருவராக வாந்தி எடுக்க ஆரம்பித்தனர்.

இதில், மகாலட்சுமி, சுபஸ்ரீ, சத்யா, அபிநயா, சாந்தகிருஷ்ணன், கார்த்திக், யுவஸ்ரீ, நிவேதா, திசாந்து, உமாமகேஸ்வரி, கலையரசி, நவமணி, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட குழந்தைகளுக்கு சிலருக்கு மயக்கமும் வந்தது. வாந்தி எடுத்ததில் நூடுல்ஸ் வரவே, கூடவே பூச்சிக்கொல்லி மருந்து வாடையும் வந்தது.

அதேபோல, குழந்தைகள் வீட்டிற்கு கொண்டு வந்து கொடுத்ததால் நூடுல்சை ஆசையாக சாப்பிட்ட மகாலட்சுமி, அகல்யா ஆகிய பெண்களும் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், வீட்டில் இருந்த பெற்றோர் திடுக்கிட்டு குழந்தைகளிடம், "என்னத்த தின்னு தொலைச்சே?" என்று வழக்கமான பாணியில் அதட்டி, உருட்ட அவர்கள் சமையல் செய்த இடத்திற்கு கொண்டுபோய் காட்டியுள்ளனர். அங்கு பூச்சிக் கொல்லி மருந்தை கண்டுபிடித்தனர்.

உடனே பதறியடித்து ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்துள்ளனர். மின்னல் வேகத்தில் வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கே எல்லோருக்கும் வயிற்றை சுத்தப்படுத்தும் மருந்து கொடுக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். பூச்சிக் கொல்லி மருந்து சாப்பிட்ட குழந்தைகள் உயிர் பிழைக்குமா? என முதலில் சோகத்தில் மூழ்கிய பெற்றோர்கள், பின்னர் அரசு மருத்துவர்களின் கடும் முயற்சியால் குழந்தைகள் உயிர் பிழைத்ததால் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

- திருச்சி ஷானு

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com