’ஜெய்பீம்’ படத்திற்கு ஏன் தேசிய விருதுகள் அறிவிக்கப்படவில்லை பிசிஸ்ரீராம் உள்ளிட்டோர் எழுப்பி உள்ள கேள்வி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2021ஆம் ஆண்டிற்கான 69வது தேசிய விருதுகள் ஆக.24ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் தமிழில் ’கடைசி விவசாயி’ சிறந்த படமாகவும், சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது நல்லாண்டிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேப்போல் ’கருவறை’ என்ற ஆவணப்படத்தின் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கும், சிறந்த கல்வி விழிப்புணர்வு ஆவணப்படமாக ’சிற்பங்களின் சிற்பங்கள்’ அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகருக்காக ’புஷ்பா’ படத்தில் நடித்த அல்லு அர்ஜூக்கும், சிறந்த நடிகைக்கான விருது ஆலியாபட் மற்றும் கீர்த்தி சனோனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு 6 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ’ஜெய்பீம்’ படத்திற்கு ஏன் தேசிய விருது அறிவிக்கப்படவில்லை என ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான பிசிஸ்ரீராம் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதுகுறித்து தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், தேசிய விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த தசாப்தத்தின் மிக மோசமான தேர்வு ’தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், தேசிய விருதுகளுக்கான மகிழ்ச்சியில் திரை உலகில் உள்ள நாங்கள் ஒன்றுப்பட்டுள்ளோம். ’ஜெய்பீம்’ படத்திற்கு விருது கொடுக்காததற்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? அல்லது இந்தியாவின் குரல் அவர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தி உள்ளதா என கேள்வி எழுப்பி உள்ளார்.
அதேபோல் நடிகர் அசோக் செல்வனும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர், தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். கடைசி விவசாயிக்கு மகிழ்ச்சி.ஆனால் ’ஜெய்பீம்’ படத்திற்கு ஏன் எதுவுமில்லை என கேள்வி எழுப்பி உள்ளார். இதேபோல் நடிகர் நானி தனது இன்ஸ்டா பக்கத்தில், ’ஜெய்பீம்’ என எழுதி அதன் பக்கத்தில் உடைந்த இதயத்தின் எமோஜியை பதிவிட்டுள்ளார்.
இதேபோல் ’சார்பட்டா பரம்பரை’, ’கர்ணன்’ போன்ற படங்களுக்கும் ஏன் தேசிய விருதுகள் அறிவிக்கப்படவில்லை என பல்வேறு தரப்பினரும், தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.இதனால் தேசிய விருதுகள் அறிவிப்பு சர்ச்சையாகி உள்ளது.