வெகுநாட்களாக ரிலீஸுக்குத் தயார் நிலையில் நீடிக்கும் விஜய்சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வரும் மே 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகந்த் இயக்கிய இந்தப் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் ‘தனி ஒருவன்’ , ‘எம்.குமரன்’ போன்ற படங்களை இயக்கிய மோகன் ராஜா ஓர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
சக்தி ஃபிலிம் ஃபேக்தரி நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு நிவாஷ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அடுக்கடுக்காக பல மொழிகளில் நடித்து வரும் விஜய்சேதுபதி, கடைசியாக வெளியான வெற்றிமாறனின் ‘விடுதலை -1’ படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அவரது கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றது. அடுத்ததாக பாலிவுட் நடிகை கட்ரினா கைஃபுடன் ‘மேரி கிறுஸ்துமஸ்’, வசனமே இல்லாத படமான ‘காந்தி டாக்ஸ்’, சாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்தில் ஓர் முக்கிய வேடம் என பல எதிர்பார்ப்புமிக்க படங்களில் விஜய்சேதுபதி நடித்து வருகிறார்.