நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. இப்படத்தில் ரஜினியுடன் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெரப், சுனில், விநாயகன் உள்ளிட்ட பல மொழிகளை சார்ந்த பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, வசந்த் ரவி, மிர்னா, ரித்விக் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரஜினியின் 'ஜெயிலர்' பட ப்ரீ புக்கிங் வேலைகள் படு ஜோராக நடந்து வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன், டார்க் காமெடி கலந்து பக்கா கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது 'ஜெயிலர்'. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் ரஜினி படம் என்பதால், இந்தப்படத்தின் வெளியீட்டை கொண்டாட ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, 'வாரிசு' படத்தில் விஜய்யின் அப்பாவாக நடித்திருந்த சரத்குமார் அந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும் போது, சூர்யவம்சம் படத்தின் 175 நாள் விழாவில் விஜய் தான் எதிர்காலத்தில் சூப்பர் ஸ்டார் என்று சரத்குமார் கூறியிருந்தார். இதனையடுத்து சூப்பர் ஸ்டார் தொடர்பான சர்ச்சைகள் சோஷியல் மீடியாக்களில் வெடிக்க ஆரம்பித்தன. விஜய் தான் தற்போதைய சூப்பர் ஸ்டார் என அவரது ரசிகர்களும், எங்கள் தலைவர் தான் நிரந்தர சூப்பர் ஸ்டார் என ரஜினி ரசிகர்களும் மாறி மாறி விவாதம் செய்து வருகின்றனர். 'நான் சூப்பர் ஸ்டார் பட்டம் தொடர்பான விளக்கத்தை ரஜினியிடம் கொடுத்து விட்டேன். ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்று விளங்குவதை வைத்தே சூப்பர் ஸ்டார் என விஜய்யை கூறினேன். இது குறித்து எல்லாம் கவலைப்பட வேண்டாம் என ரஜினி எனக்கு ஆறுதல் தெரிவித்தார் என தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சரத்குமார் விளக்கமளித்துள்ளார் .
'அண்ணாத்த' படம் ரஜினிக்கும், 'பீஸ்ட்' படம் நெல்சனுக்கும் கைகொடுக்காததால் 'ஜெயிலர்' படத்தின் மீது ரஜினியும் நெல்சனும் அதீத நம்பிக்கை வைத்துள்ளனர்.மேலும் 'ஜெயிலர்' படத்தினை தொடர்ந்து த.செ. ஞானவேல் இயக்கத்தில் 'தலைவர் 170' படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.