சினிமா
டொவினோ தாமஸ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘அஜயண்டே ரண்டம் மோஷனம்’!
டொவினோ தாமஸ் நடிக்கும் ‘அஜயண்டே ரண்டம் மோஷனம்’ படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டொவினோ தாமஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘2018’ திரைப்படம் மக்கல் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. விமர்சகர்கள் மத்தியிலும் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றது. இந்நிலையில், அவரது அடுத்தப் படமான ‘அஜயண்டே ரண்டம் மோஷனம்’ படத்தின் டீசர் கூடிய விரைவில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. பீரியட் ஆக்ஷன் டிராமாவாக உருவாகும் இந்தத் திரைப்படத்தில் டொவினோ தாமஸ், மூன்று வேடங்களில் நடிக்கிறார்.
மேலும், இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், கிரித்தி ஷெட்டி, சுரபி லக்ஷ்மி , ஹரீஷ் பேரடி, ரோஹினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். திபு நினன் இசையமைக்கும் இந்தப் படம் ஒரு பான் இந்தியப் படமாக உருவாகியுள்ளது. 1900, 1950, 1990 ஆகிய மூன்று காலகட்டங்களில் நடக்கும் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.