நெல்சனின் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், யோகிபாபு, வசந்த் ரவி உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு மிக முக்கிய காரணம் படக்குழு செய்த ப்ரோமோஷன்கள் தான் என்றே சொல்லலாம். நெல்சன் வழக்கம் போல தன் ஸ்டைலில் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ''காவாலா'' பாடலை வெளியிட்டார். அந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெறவே படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதையடுத்து வெளியான ஹுக்கும் பாடல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி ஹிட்டடித்தது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. இவ்விழாவில் ரஜினி, நெல்சன், கலாநிதிமாறன் என அனைவரும் படத்தை பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களை பேசினார்கள். இது இப்படத்தின் ஹைப்பை மேலும் அதிகரித்தது. 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி நெல்சனை கட்டி அணைத்தது முதல் அவர் நம்பிகையுடன் பேசியது வரை, அனைத்தையும் பார்க்கும்போது இப்படத்தின் மீது ரஜினிக்கு அதிக நம்பிக்கை இருப்பதும், இப்படம் வெற்றி பெரும் என்ற நம்பிக்கை அவரது முகத்தில் தெரிந்தது. இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், ரஜினிகாந்திடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது. "ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் அனைவரும் திரையரங்கிற்கு வந்து படம் பாருங்கள் என்று பேசினார். அதில் எங்களுக்கு மகிழ்ச்சி. அதுபோல தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் 'ஜெயிலர்' திரைப்படம் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளனர்.
ஜெயிலர் திரைப்படத்தின் எதிரொலியால் கோலிவுட்டில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. அதாவது ஜெயிலர் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருவதால் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருந்த பல படங்கள் தங்களின் வெளியீட்டை ஒத்திவைத்துள்ளது. முதலில் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் ஆகஸ்ட் வெளியாவதாக இருந்தது. ஆனால் ஜெயிலர் திரைப்படம் வெளியாவதால் மாவீரன் ஜூலை மாதமே வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து விஷாலின் மார்க் ஆண்டனி, லாரன்ஸின் சந்திரமுகி 2 என பல படங்கள் ஆகஸ்ட் மாதம் வெளியாவதாக இருந்து பின்பு ஒத்திவைக்கப்பட்டது.
'ஜெயிலர்' படத்தின் முன்பதிவும் அமோகமான இருப்பதாக அயல்நாட்டில் இருந்து தகவல்கள் வருகின்றன. முன்பதிவின் மூலமே ஜெயிலர் பலகோடி வசூலை பெரும் எனவும், ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் இப்படம் மிகப்பெரிய வசூலை குவிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பட்சத்தில் வசூலில் மிகப்பெரிய சாதனையை படைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.