‘எதிரியே உன்னை தேடி வருவான்’ என முடியும் வசனத்துடன் தனி ஒருவன் 2 பாகத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2015-ல் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‘தனி ஒருவன்’.இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக மோகன் ராஜா அறிவித்திருந்தார்.ஆனால் சில காரணங்களால் படத்திற்கான பணிகள் தள்ளிப்போனது.
தனி ஒருவன் படம் வெளியாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில், இன்று ( ஆக.28) இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த இரண்டாம் பாகத்திலும், ஜெயம் ரவி, நயன்தாரா நடிக்கின்றனர். ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார்.
ஏஜிஎஸ் நிறுவனமே இந்த பாகத்தையும் தயாரிக்கிறது. தனி ஒருவன் 2ஆம் பாகத்தித்திற்கான புரொமோ வீடியோவில், முதல் பாகத்தில் சித்தார்த் அபிமன்யு வேடத்தில் நடித்திருந்த அரவிந்த் சாமி இறந்த போகும் போது கொடுத்த குளூவை வைத்து இரண்டாம் பாகத்திற்கான கதையை மோகன் ராஜா தயார் செய்வது போல் உள்ளது.
அதில், மித்ரன் ஒவ்வொரு ஆயுதமாக எடுக்கிறார். பின்னர் ஏதோ குழப்பத்தால் அதை கைவிடுகிறார். நான் ஏன் இன்னும் என் எதிரியை தேடி போகல என்று ஜெயம் ரவி கேட்க, அதற்கு மோகன் ராஜா ’இந்த கதையில் எதிரியே உன்னை தேடி வருவான்’ என கூறுவது போல் அமைந்துள்ளது.இதனால் முதல் பாகத்திற்கு இருந்ததை விட ’தனி ஒருவன் 2’ பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.