கானாவில் கலக்கிய சிறுவன், திரைப்பட வாய்ப்பு தந்த தமன்

தமனின் செயல்கள் அனைவரின் பாராட்டைப் பெற்று வருகிறது.
Super Singer 9
Super Singer 9

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கடந்த வாரம் இரு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழ்ந்தது. அனைவரையும் தன் பாடலால் உருக வைத்த கண் பார்வையற்ற சிறுமி புரோகித ஶ்ரீக்கு பார்வை கிடைக்க அனைத்து உதவிகளையும் செயவதாக உறுதிளியத்த இசையமைப்பாளர் தமன், கானா பாடலை பாடி அசத்திய சிறுவன் கலர்வெடி கோகுலுக்கு திரைப்படத்தில் பாடல் பாட வாய்ப்பளிப்பதாக உறுதியளித்தார்.

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இசையில் சிறந்து விளங்கும், சிறு குழந்தைகள் கலந்துகொள்ளும் இந்த சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சி, கடந்த 8 சீசன்களை கடந்த நிலையில், தற்போது வெற்றிகரமான 9 தாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீஸனில், நீலகிரியைச் சேர்ந்த புரோகித ஶ்ரீ எனும் கண்பார்வையற்ற சிறுமி கலந்துகொண்டு, அழகான குரலால், அனைவரையும் அசர வைத்தார். கண் பார்வையில்லையென்றாலும் வாழ்க்கையை எதிர்கொள்ளும் அந்த சிறுமியின் தைரியம், இசைத்திறமை அனைவரையும் கவர்ந்தது.

இந்நிகழ்ச்சியில் ஜட்ஜாக பங்கேற்று வரும் இசையமைப்பாளர் தமன், சிறுமி புரோகித ஶ்ரீ உடைய கதையை கேட்டு வெகு உருக்கமாகி கண்ணீர் சிந்தினார். மேலும் புரோகித ஶ்ரீக்கு மீண்டும் பார்வை கிடைக்க, தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன் என்று உறுதியளித்தார். அவரின் இந்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இதே நிகழ்ச்சியில் பங்கு கொண்ட சிறுவன் கலர்வெடி கோகுல், தனது அண்ணன் சரவெடி சரவணன் எழுதிய கானா பாடலை, கொண்டாட்டத்துடன் பாடி அனைவரையும் பிரமிக்க வைத்தார்.

எளிமையான குடும்பத்தில் பிறந்து, குடும்ப பாரத்தை தன்மேல் சுமந்துகொண்டு, கானாவில் எதிர்காலத்தை கனவு காணும் கலர்வெடி கோகுலுக்கு, அவரின் வாழ்க்கையை மாற்றும் பெரும் ஆசிர்வாதத்தை தந்தார் தமன். இந்நிகழ்ச்சியின் போது, வரும் தீபாவளளிக்குள், ஒரு மிகப்பெரிய நட்சத்திரத்தின் படத்தில், அவர் அண்ணண் பாடல் எழுதவும், கலர்வெடி கோகுல் பாடவும் வாய்ப்பளிப்பதாக உறுதியளித்தார் இசையமைப்பாளர் தமன்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், திறமையால் ஒளிரும் எளிமையான சிறுவர்களுக்கு பெரும் மாற்றத்தை, வாய்ப்பை வழங்கும், இசையமைப்பாளார் தமனின் செயல்கள் அனைவரின் பாராட்டைப் பெற்று வருகிறது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com